குமரியில் போலீசாக நடித்து நகைகள் அபேஸ் 2 தனிப்படை அமைத்து விசாரணை

நாகர்கோவில், நவ.15 : குமரி மாவட்டத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம், போலீஸ் என கூறி நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. போலீஸ் சரகத்துக்குட்பட்ட கோட்டார், வடசேரி, நேசமணிநகர், ஆசாரிபள்ளம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் அதிகளவில் இதே பாணியில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் வடசேரி வணிகர் தெருவை சேர்ந்த ராதா (69) என்ற மூதாட்டி வடசேரியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு வரும் போது அவரிடம் போலீஸ் என கூறி 12 பவுன் நகைகளை கழற்ற செய்து அபேஸ் செய்து சென்றனர். இதுவரை 10க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

 

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதே பாணியில் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. கடந்த 2 வருடங்களாக கைவரிசை காட்டி வரும் இந்த கும்பல் இதுவரை பிடிபட வில்லை. ஒரு சில இடங்களில் கண்காணிப்பு கேமராவில் சிக்கி உள்ள இந்த வாலிபர்கள் பற்றிய அடையாளங்களை ஏற்கனவே காவல்துறை அறிவிப்பாக வெளியிட்டு தேடுதல் வேட்டை நடத்தியது. ஆனால் இவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை. இந்த சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எஸ்.பி. நாத் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று நிருபரிடம் கூறியதாவது :

போலீஸ் என கூறி, நகைகளை கழற்ற செய்து அவற்றை பறித்து சென்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த கும்பல் தொடர்பான முழு விவரங்கள் தெரிய வில்லை. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையில் நடந்து செல்லும் வயதான பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போலீஸ் என கூறும் நபர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். சாலையில் நடந்து செல்லும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த கும்பலை பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு வாழ்த்து  குழந்தைகள் தினத்தையொட்டி கோட்டார் சமூக சேவை சங்கம் சார்பில் செயல்படும் 1098 சைல்டு லைன் அமைப்பு சார்பில், பள்ளி குழந்தைகள் எஸ்.பி. நாத்தை சந்தித்து பேசினர். அவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த எஸ்.பி. நாத், கல்வி தான் மிகவும் முக்கியமானது.  எனவே அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: