தர்மபுரி கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையோரம் வசிக்கும் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த கல்வி அதிகாரிகள்

தர்மபுரி, நவ.14: தர்மபுரி நகரில் சாலையோரம் வசிக்கும் நாடோடிகளின் குழந்தைகளை, மீட்டு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் கல்வி அதிகாரிகள் ஈடுபட்டனர்.தர்மபுரி கலெக்டர் அலுவலகம் எதிரே நாடோடிகள் சிலர் கூடை மற்றும் கைவினை பொருட்கள் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காமல் இருப்பது குறித்து, தர்மபுரி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைவர் துரைசாமி மற்றும் அமைப்பு செயலாளர் செந்தில்வேல் ஆகியோர் மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் நேற்று காலை மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி உள்ளிட்ட அலுவலர்கள், கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையோரத்தில் நடோடிகள் வசிக்கும் இடத்திற்கு, நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். இதில், அவர்களது 4 குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, முத்து என்ற தொழிலாளியின் மகள்கள் மேரி(7), ஜானு(5), மகன் மகேஷ்(5) மற்றும் முத்துவின் தம்பி ராஜாவின் மகன் ஓவன்(6) ஆகிய 4 குழந்தைகளையும் தர்மபுரி அடுத்துள்ள ஒட்டப்பட்டி அவ்வை நகர் தொடக்கப்பள்ளியில், கல்வி கற்க சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், நோட்டுப்புத்தகம் ஆகியன வழங்கப்பட்டது. இதுதவிர அருகாமையிலுள்ள அங்கன்வாடியில் 5 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகளை சேர்த்தனர்.குழந்தைகளின் பெற்றோரிடம் அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகளை முறையாக படிக்க வைக்க வேண்டும். பெற்றோர் வெளியூர்களுக்கு செல்லும் சமயத்தில் குழந்தைகளை விடுதியில் முற்றிலும் இலவசமாக தங்கி வைத்து படிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

Related Stories: