‘கஜா’ புயல் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, நவ.14: ‘கஜா’ புயலையொட்டி முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.  வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளை நாளை (15ம் தேதி) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடதமிழகம் மற்றும் தமிழகத்தின் உள்மாவட்ட பகுதிகளில், பரவலாக மழை எதிர்பாக்கப்படுவதாகவும், காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 14ம் தேதி (இன்று) பிற்பகல் முதல் மழையும், 15ம் தேதி (நாளை) பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தர்மபுரி கலெக்டர் அலுவலத்தில், கலெக்டர் மலர்விழி தலைமையில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கூறியதாவது: அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சமயத்தில் உடனடி தகவல் அளிக்கும் பொருட்டு கிராம அளவில் 252 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இயற்கை இடர்பாட்டின் போது, கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு கிராம அளவில் 205 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பருவமழைக் காலத்தின் போது, சூறாவளிக்காற்றினால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் கீழே விழ நேர்ந்தால், அவற்றை உடனுக்குடன் அகற்றிட தேவையான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்கம்பங்கள் கீழே விழும்போது உடனடியாக மின்னிணைப்பை துண்டித்து சரிசெய்யப்பட்ட பின்னர், மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும். போக்குவரத்து தடைபடும் சமயங்களில், மாற்று வழியாக போக்குவரத்தை திருப்பிவிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

 மழை மற்றும் பலத்த காற்று வீசும் சமயங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம். சாலையோரங்களில் மரத்தின் கீழ் நிற்க வேண்டாம். மழை, இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்க வேண்டும். மின்கம்பங்கள், மரங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம். இயற்கை இடர்பாடுகளை உடனுக்குடன், மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த இலவச தொலைபேசி எண் 1077, 1800-425-1071, 1800-425-7016 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.  மேலும் வாட்ஸ் அப் எண்:89038-91077 ஆகிய எண்ணின் மூலம், மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு மழைக்கால இடர்பாடுகள் குறித்து, பொதுமக்கள் அவ்வப்போது  தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார். கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: