பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

தர்மபுரி, நவ.14: தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்திய, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 309 பேர் கைது செய்யப்பட்டனர்.தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு திட்ட பொருளாளர் ஜீவா தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் நாகராஜன், விஜயன், லெனின், மகேந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு கருணைத்தொகையாக ₹4 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு அமர்த்தி 22.2.2018ல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தப்படி, மின்துறை அமைச்சர் அறிவித்த தினக்கூலி ₹380 வழங்க வேண்டும். இபிஎப் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நிரந்தரம் பெறாத ஒப்பந்த ஊழியர்களை, நிரந்தரம் செய்ய வேண்டும்.

கே2 அக்ரிமெண்ட் அடிப்படையில் பணிமுடித்து நிலுவையில் உள்ள பட்டியல்கள் காலதாமதமின்றி, பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். மின்வாரிய பணியின்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடனடியாக மருத்துவ செலவு மற்றும் நிவாரணங்களை மின்வாரிய நிர்வாகமே வழங்க வேண்டும். மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் மறியல் போராட்டத்திற்கு அனுமதி வழங்காததால், ஒப்பந்த ஊழியர்கள் தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய 309 பேரை, தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: