மர்ம நபர்கள் கைவரிசை புகார் கொடுத்த மாணவர் மீது வழக்கு எஸ்பி அலுவலகம் முன் அமர்ந்து சட்ட மாணவர்கள் போராட்டம்

திருச்சி, நவ. 14: எஸ்பி அலுவலகம் முன் அமர்ந்து சட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம் பெருகமணி கீழத்தெருவை சேர்ந்தவர் பொன்னம்பலம் மகன் சிவசோழன்(21). திருச்சி சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். பெருகமணி பகுதியை சேர்ந்த 5 பேர் சமூக வலைதளங்களில் நடிகர் வடிவேலுவின் படத்தை போட்டு சிவசோழனை விமர்சித்துள்ளனர். இதுகுறித்து கடந்த வாரம் கேட்ட போது 5 பேர் சிவசோழனை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.இதற்கிடையில் சிவசோழன் அளித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை எஸ்ஐ யுவராணி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து திரும்பிய சிவசோழன் இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக்கிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் சிவசோழனை தாக்கியதாக பெருகமணியை சேர்ந்த 5 பேர் மீது எஸ்ஐ யுவராணி வழக்குப்பதிந்தார். அதேபோல் 5 பேரிடமும் ஒரு புகார் மனு வாங்கி சிவசோழன் மீதும் வழக்குப்பதிந்தார்.

இதைக்கண்டித்து சிவசோழன் மற்றும்  சில  மாணவர்கள் நேற்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள எஸ்பி அலுவலக வளாகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். எஸ்ஐ யுவராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.இதையடுத்து மாணவர்களிடம் கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் சிவசோழன் உள்ளிட்ட 4 மாணவர்கள்  எஸ்பியுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். பேச்சுவார்த்தையில் எஸ்ஐ யுவராணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Related Stories: