திருத்துறைப்பூண்டி அருகே அடிக்கடி விபத்து மேல அம்மனூர், திருத்தங்கூர் குளக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க மக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, நவ. 14: திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் முதல் திருக்கொள்ளிக்காடு வரையிலான சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க மேல அம்மனூர், திருத்தங்கூர் குளக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கச்சனம் முதல் திருக்கொள்ளிக்காடு செல்லும் சாலையில் தினம் தோறும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு நூற்றுக்கணக்கான  வாகனங்களில் பக்தர்கள் வ்ருகை தந்த வண்ணம் உள்ளனர். சனிக்கிழமைகளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகிறார்கள். மேலும் இந்த சாலை வழியாக பல்வேறு கிராமப்பகுதிகளில்  இருந்து பொதுமக்கள், கல்லூரி, பள்ளி, மாணவ, மாணவிகள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.

மேல அம்மனூர் கிராமத்தில் உள்ள மூங்கில் குட்டை குளத்தில், சாலை ஓரம் அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் குளத்தில் இறங்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில், மழைக் காலங்களில் மாணவர்கள் குளத்தில் விழுந்து விடுகின்றனர். கடந்த ஆண்டு சனி பெயர்ச்சியின்போது  இதே சாலையில் திருத்தங்கூர் குளத்தில் சென்னையில் இருந்து பக்தர்கள் வந்த கார் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினார்கள். சனி பெயர்ச்சிக்கு முன்பு இது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்ட பிறகு நெடுஞ்சாலைத்துறையினர் குளத்தின்  ஓரத்தில் மரக்கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில் தற்போது சாலை அமைக்கப்பட்டு வருவதால் தடுப்புகள் அகற்றப்பட்டு விட்டது. எனவே பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் முன் குளத்தின் கரையில் தடுப்பு சுவர் கட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே உடனடியாக குளத்தின் ஓரத்தில் தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: