ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலோர கிராமங்களில் ‘கஜா’ புயல் பீதியில் பொதுமக்கள் ஆய்வில் அதிகாரிகள்

ஆர்.எஸ்.மங்கலம், நவ. 14: தமிழகத்தில் ‘கஜா’ புயல் உருவாகியுள்ள நிலையில் கடலோர பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதிகாரிகள் ஆய்வில் இறங்கியுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கடலோர கிராமங்களான திருப்பாலைக்குடி, மோர்பண்ணை, கடலூர், உப்பூர் போன்ற பகுதிகளில் கஜா புயலின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் தமீம்ராஜா தலைமையிலான குழு மும்முரமாக vஇறங்கியுள்ளனர்.

இந்த குழுவில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெய்லானி, யூனியன் பி.டி.ஓ பச்சைமால் உள்ளனர். இவர்கள் இயற்கையின் சீற்றம் மற்றும் கஜா புயலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம், தங்களுடைய படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

இதுகுறித்து தாசில்தார் தமீம்ராஜா கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் எந்த உதவி வேண்டுமானாலும் 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். கஜாபுயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர கிராமங்களான திருப்பாலைக்குடி பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக பல்நோக்கு சேவை மைய கட்டிடம் மற்றும் பள்ளிக்கூடம் தயார் நிலையில் உள்ளது. மோர்பண்ணை மக்களுக்கு அருகில் உப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் தயார் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மற்றும் பொதுமக்களும் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துக்கொள்ளவும், புயல் காற்று மற்றும் மழை நேரங்களில் மின் வயர்கள் அருந்து கீழே கிடந்தாலோ, தாழ்வாக தொங்கினாலோ அதனால் அதன் அருகில் செல்லாமலும், கையால் தொடாமலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது போன்ற சம்பவம் இருந்தால் உடனடியாக மின்சார வாரியத்திற்கோ, எங்களுக்கோ உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சாயல்குடி: இதேபோல், சாயல்குடி பகுதி கடற்கரை கிராமங்களில் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் வளைகுடா கடற்பகுதியான வாலிநோக்கம், கீழமுந்தல், மாரியூர், மூக்கையூர், குதிரைமொழி மற்றும் சாயல்குடி, தரைக்குடி, பெரியகுளம் ஆகிய கிராம பகுதிகளில் மாவட்ட அதிகாரிகள் மதியழகன், வீரப்பன், சுகிப்பிரேம்லா, சிவதாஸ் ஆகியோர் தலைமையில் நான்கு குழுக்கள் ஆய்வு செய்தனர். கடலாடி தாசில்தார் முத்துலெட்சுமி, துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன், சாந்தி, வட்டார மருத்துவர் சரவணன், தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் சிவசுப்ரமணியன், காவல்துறையினர் முன்னிலையில் ரோந்து குழுக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள், தங்கவைக்கும் இடங்கள், சுகாதாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி முன்னிலையில் ஏர்வாடி, வாலிநோக்கம், மாரியூர், மூக்கையூர், நரிப்பையூர், ரோச்மாநகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் கொசு மருந்து அடித்தல், தெருக்களில் கிரிமிநாசினி மருந்து தெளித்தல், குடிநீர், தெருவிளக்கு, சாலை பராமரித்தல் போன்ற பணிகள் நடந்தது.

Related Stories: