தொண்டி, நம்புதாளையில் புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்

தொண்டி, நவ.14: புயல் எச்சரிக்கை காரணமாக தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதி மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. கஜா புயல் ராமநாதபுரம் மாவட்டத்தை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இப்பகுதியில் புயல் குறித்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  இதனால் மீன் விலையும் சற்று உயர்ந்துள்ளது. மேலும் கரை ஓரங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களும் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  மேலும் நம்புதாளையில் உள்ள புயல் காப்பகம் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கமுதி: கமுதி சுற்றுவட்டார பகுதிகளில், கஜா புயலையொட்டி வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, பேரூராட்சி, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கமுதி, பாக்குவெட்டி, செங்கப்படை, மண்டலமாணிக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள குண்டாற்றை ஆய்வு செய்தனர. இப்பகுதிகளில் வெள்ளம் வந்தால் அருகிலுள்ள அரசு பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களை கொண்டு பணிகளை மேற்கொள்வதற்கு தயார் செய்தனர். உதவி ஆனையர் (ஆயம்) ரவிச்சந்திரன் தலைமையில் இந்த ஆய்வு பணி நடைபெற்றது. இதில் கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வீரராகவன், சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் மரகதமேரி, மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, வருவாய் ஆய்வாளர் முருகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் செய்யதுஉஷேன்அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: