கீழக்கரை பஸ் நிலையத்தில் கால்வாய் அடைப்பால் சாலையில் ஓடும் கழிவுநீர்

கீழக்கரை, நவ.14: கீழக்கரை பஸ் நிலையம் அருகில் கடந்த மூன்று மாதங்களாக வழிந்தோடும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை புதிய பஸ் நிலையத்தின் நுழைவுவாயிலில் கடந்த மூன்று மாதங்களாக கழிவுநீர் வாய்கால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வருபவர்களும் துர்நாற்றம் தாங்காமல் மூக்கை பிடித்து கொண்டே நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இந்த கால்வாய் அருகில் உணவகம் மற்றும் டீ கடைகள் உள்ளது. இதனால் கழிவு நீரில் ஒட்டும் ஈக்கள் உணவகத்தில் உள்ள உணவு பண்டங்களிலும் ஒட்டும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீரில் மலேரியாவை பரப்பும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கி கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் காந்தி கூறுகையில், கீழக்கரையில் ஆங்காங்கே மர்ம காய்ச்சல் பரவி வருவதால், அரசு மருத்துவமனையில் தங்கி ஏராளமானோர் சிகிச்சை பெற இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய பஸ் நிலையம் நுழைவு வாயிலில் கடந்த முன்று மாதங்களுக்கும் மேலாக கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் நுர்நாற்றம் வீசிவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வெளியூரிலிருந்து நம் ஊருக்கு வருபவர்கள் மிகவும் அச்சத்துடன் வருகின்றனர். எனவே இதைசரி செய்வதற்கு நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை, மாவட்ட சுகாதாரத்துறை இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: