ஏர்வாடி ஊராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பும் இல்லை சாலையையும் காணவில்லை அரசு பணம் பல லட்சம் ஸ்வாஹா கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

சாயல்குடி, நவ. 14: கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சியில் பலகோடி மதிப்பீட்டில் நடந்த அரசு திட்டப்பணிகள் முறையாக நடக்கவில்லை எனவும், தரமற்ற பணிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், அரசு பணம் பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மெய்யப்பன்வலசை செந்தூரான், குமார், மாணிக்கம், மலைச்சாமி, ராமர் கூறும்போது: ஏர்வாடி ஊராட்சியில் பிரபலமான மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக திகழும் தர்ஹா உள்ளதால் உள் மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர், ஆனால் இங்கு போதிய குடிநீர், கழிவறை, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உணவக கழிவுகள், கழிவுநீர் அகற்றுவது கிடையாது. இதனால் டெங்கு போன்ற தொற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கட்டப்பட்ட பேருந்துநிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டப்பணிகள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.

ஏர்வாடி ஊராட்சியில் 15 குக்கிராமங்கள் உள்ளன. இங்கும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அடிப்படை வசதிகள் கிடையாது. கடலாடி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியாகவும், சுற்றுலா தலமாகவும் ஏர்வாடி ஊராட்சி இருப்பதால், மாவட்ட ஊராட்சி முகமை சார்பில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்துள்ள பணிகள் முறையாக நடக்கவில்லை. இதில் மெய்யப்பன்வலசை, ஏரான்துறை கிராமங்களில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவலறியும் உரிமை சட்டத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சாலையை காணவில்லை. ஊராட்சியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் இணைப்பு இல்லை. மேலும் அதிகளவில் தெருவிளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏர்வாடி ஊராட்சியில் போதிய தெருவிளக்குகள் இன்றி, இரவு நேரத்தில் கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை உள்ளது. இது போன்று ஒவ்வொரு அரசு திட்டப்பணிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தெரியவந்துள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து மாவட்ட உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) செல்லத்துரை கூறும்போது, புகார் வந்துள்ளது, விரைவில் நேரில் சென்று விசாரணை நடத்தப்படும்.  தனிக்கை நிர்வாக உதவி இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: