தூய்மைப்பள்ளி விருதுக்கான தேசிய அளவில் ஏ.ஆவாரம்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளி தேர்வு ரூ.80 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றது

திண்டுக்கல், நவ. 14:  தூய்மைப்பள்ளி விருது திட்டத்தில் தேசிய அளவில் தேர்வான நிலக்கோட்டை ஏ.ஆவாரம்பட்டி கள்ளர் பள்ளிக்கு ரூ.80 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஆண்டு தூய்மைப்பள்ளி விருதிற்கு விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி நாடுமுழுவதும் இணையதளம் மூலம் ஏராளமான பள்ளிகள் இதற்காக விண்ணப்பித்தன. குடிநீர், கழிப்பறை, சோப்புடன் கூடிய கைகழுவும் வசதி, திறன் உயர்த்துதல் உள்ளிட்ட விபரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த விபரங்கள் பல்வேறு குழுக்கள் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு விருதிற்கான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 47 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  தேசிய அளவில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட  6 பள்ளிகளில் நிலக்கோட்டை ஒன்றியம் ஏ.ஆவாரம்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியும் ஒன்று.

இப்பள்ளிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் தேசிய விருது மற்றும் ரூ.50 ஆயிரமும், மாநில அரசின் சார்பில் விருது மற்றும் ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இதற்காக கலெக்டர் வினய் இப்பள்ளி மாணவ, மாணவியரை பாராட்டினார்.மாவட்ட அளவில் ஒட்டுமொத்த பிரிவில் தேர்வு பெற்ற  7 பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.10ஆயிரம், உடற்கூறுவாரியான பிரிவில் தேர்வு பெற்ற 39 பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.5 ஆயிரம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் தூய்மைஇந்தியா தொடர்பாக நடைபெற்ற கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்ற 9 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்க்கும் சான்றிதழ்  வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு  உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: