வாகனங்களில் அதிக பேருடன் வந்ததாக டிடிவி அணி மாஜி எம்எல்ஏ உள்பட 12 பேர் மீது வழக்கு

செம்பட்டி, நவ. 14:நிலக்கோட்டையில் நடந்த உண்ணாவிரதத்திற்கு வாகனங்களில் அதிகளவு ஆட்களை ஏற்றி வந்ததாக, டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தங்கதுரை உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமமுக சார்பில் உணணாவிரத போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் எம்எல்ஏ தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி அதிகளவு ஆட்களை வாகனத்தில் ஏற்றி வந்ததாகவும், பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நெரிசல் ஏற்படுத்தியதாக நிலக்கோட்டை போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது.

அதன்பேரில் முன்னாள் எம்எல்ஏ தங்கதுரை, அமமுக மாவட்ட பொருளாளர் வைகைபாலன், நகர பொறுப்பாளர்கள் பாலமுருகன், முத்துகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்ட நிர்வாகிகள் சலீம்ராஜா, சரவணன், அழகுமுருகன், ஸ்ரீதர் மற்றும் ஜெயதேவனி, சதீஷ்குமார் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வத்தலக்குண்டுவில் தினகரனை வரவேற்று அனுமதியில்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்ததாக முன்னாள் எம்எல்ஏ தங்கதுரை, நிர்வாகிகள் வைகைபாலன், கோவிந்தராஜ் நடராஜன், பாண்டிராதா, நசீம், குமார், தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் செல்வம் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: