இன்று உலக சர்க்கரை நோயாளிகள் தினம் கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் உடல் உறுப்புகள் முழுவதையும் பாதிக்கும் சிறப்பு மருத்துவர் மணிவண்ணன் தகவல்

காரைக்குடி, நவ. 14: கட்டுப்பாடில்லா சர்க்கரை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் என அன்னை பார்வதி சர்க்கரை நோய் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய சிறப்பு மருத்துவர் டாக்டர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சர்க்கரை நோய் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள உலக சுகாதார நிறுவனம் நவம்பர் 14ம் தேதியை சர்க்கரை நோயாளர் தினமாக அறிவித்து கடைபிடித்து வருகிறது. சர்க்கரை நோயாளர்கள் அதிகம் உள்ளநாடு சீனா, இந்தியா, அமெரிக்கா. இயற்கையாக நமது ஜீன்களில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். துரித உணவுகள், மேற்கத்திய வாழ்க்கை முறை, அதிக உடல் எடை, நகரமயமாக்கல், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை இந்நோய் வரும் வாய்ப்பை அதிகமாக்குகின்றன.

10 வயது முதல் 20 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் பிசிஓடீ என்ற கர்ப்பப்பை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் கண், காது, பல், இதயம், கால்கள், வயிறு, எலும்பு, நரம்பு மண்டலம், சிறுநீரகம் போன்ற அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். மேலும் காசநோய், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல நோய்களுக்கு மூல காரணமாய் அமைவதால் இந்நோயை நோய்களின் தாய் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட அல்லது ஊசி போட வேண்டிய நோய். எனவே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கு என தனி பிரிவு துவங்க வேண்டும். அரசும், மக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இந்த நவம்பர் 14 சர்க்கரை நோயாளர்கள் தினம். எனவே ‘‘அக்கறை காட்டினால் சர்க்கரை குறையும்’’ என்றார்.

Related Stories: