சொன்னபடி தண்ணீர் திறக்கவில்லை பெரியாறு பாசன விவசாயிகள் ஏமாற்றம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு

சிவகங்கை, நவ.14: சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு நீர் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனத்தின் கீழ் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் ஒரு போக பாசன பகுதியாக உள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக மதுரை மாவட்டம் மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.  இந்த ஆண்டு பெரியாறு பாசன நீர் வைகை அணையில் இருந்து ஒரு போக சாகுபடிக்கு ஆக.20ம் தேதி திறக்கப்பட்டது. 10 நாட்களில் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் நீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப்பின் சிவகங்கை மாவட்டத்தில் சில கண்மாய்களுக்கு சிறிதளவு நீர் அவ்வப்போது திறக்கப்பட்டது. சிவகங்கை தெப்பக்குளத்தில் அரை தெப்பக்குளம் அளவிற்கு நீர் நிரப்பப்பட்டது. சிவகங்கை மாவட்டத்திற்கு சீல்டு, லெஸ்சிஸ், 48 கால்வாய், கட்டாணிபட்டி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய கால்வாய்கள் வழி கடைமடை பகுதி வரை பெரியாறு நீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் நீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் பெரியாறு பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் பாஸ்கரன், எம்பி செந்தில்நாதன் மற்றும் மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை பெரியாறு பாசன அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திற்கு அனைத்து கால்வாய்களிலும் நீர் திறக்கப்படும் என அமைச்சர், எம்.பி, கலெக்டர் உறுதியளித்தனர். ஆனால் இரண்டு வாரங்களாக எந்த கால்வாயிலும் நீர் திறக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் தொடர் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு பெரியாறு நீர் திறக்கப்படுவது குறித்து ஆண்டுதோறும் நம்பிக்கையளித்து பின்னர் ஏமாற்றி விடுவர். இந்த ஆண்டு கடுமையான தொடர் போராட்டங்களுக்கு பின்னர் பெயரளவிற்கு நீர் திறக்கப்பட்டது. முழுமையாக கடைமடை வரை நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய நிலையில் அதற்கான உறுதியளிக்கப்பட்டது.  ஆனால் இரண்டு வாரங்களாக எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் நவ.20 காலை 10 மணிக்கு மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்றனர்.

Related Stories: