தண்டவாளம் அருகே ஏற்பட்ட குழிகளால் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சி, நவ. 14:  பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவு ரயில்வே கேட் பகுதி தண்டவாளத்தில், ஏற்பட்ட குழிகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொள்ளாச்சி- பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் ரயில்வே கேட் உள்ளது. அந்த வழியாக கோவை செல்லும் அகல ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணியானது, கடந்த ஓராண்டுக்கு முன்பு நிறைவடைந்து, ரயில் சேவை துவங்கப்பட்டது. இதில் சில நாட்களுக்கு முன்பு, வடுகபாளையம் பிரிவு ரயில்வே கேட் வழியாக செல்லும் தண்டவாளத்தின் இரு பகுதிகளிலும் ரோட்டை முறையாக செப்பனிடாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து கோவை வரையிலான அகல ரயில்பாதையில் ஆங்காங்கே பெயர்ந்து போன ஜல்லிகற்கள் அப்புறப்படுத்தப்பட்டதுடன், தண்டவாளத்தில் அதிர்வு குறித்து ஆராயப்பட்டது. பின்னர், ஜல்லி கற்களை சீரமைக்காமல் விட்டுவிட்டனர். தற்போது, கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலத்தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, வடக்கிபாளையம் ரயில்வே கேட் பகுதியில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களை  அப்புறப்படுத்துவதுடன், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: