நாட்டு நலப்பணி திட்ட பொன்விழா மகாத்மா காந்தியின் பிரமாண்ட ஓவியம் வரைந்து அசத்தல்

மஞ்சூர், நவ.14:  மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் விழா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட பொன்விழாவை முன்னிட்டு, காந்தியின் பிரமாண்ட ஓவியத்தை வரைந்து மாணவ, மாணவிகள் அசத்தினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்தின் 50ம் ஆண்டு பொன் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் ராம்கி வரவேற்றார். இதை தொடர்ந்து நாட்டுநலப்பணி திட்டத்தின் மாவட்ட தொடர்பு அலுவலர் சசிகுமார் தலைமையில் 11 மற்றும் 12ம் வகுப்புகளை சேர்ந்த என்.எஸ்.எஸ் மாணவ, மாணவிகள் 50கும் மேற்பட்டோர் பள்ளியை சுற்றிலும் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.

பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் இருந்த செடி,கொடிகளை வெட்டி அகற்றியதுடன் முகப்பு வாயிலில் உள்ள பூங்காவை சீரமைத்து மலர் செடிகளை பராமரித்தார்கள். இதை தொடர்ந்து விழாவை நினைவு கூறும் வகையில் உப்பு மற்றும் வண்ணப் பொடிகளை கொண்டு மகாத்மா காந்தியின் பிரமாண்ட ஓவியத்தை வரைந்து அசத்தினார்கள்.தொடர்ந்து நாட்டுநலப்பணி திட்டத்தின் நோக்கம், திட்டத்தின் மாணவர்கள் பங்கு குறித்து தலைமையாசிரியர் ரவிச்சந்திரன், மாவட்ட தொடர்பு அலுவலர் சசிகுமார் பேசினார்கள். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சாமிநாதன், ஆனந்த், சீனிவாசன், ராஜேந்திரன், மோகன், டெய்சிஒபிலியா, அருணா உள்ளிட்டோர் செய்திருந்தார்கள்.

Related Stories: