சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்ஊழியர்கள் கைது

ஈரோடு, நவ. 14: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஈரோடு மின்பகிர்மான வட்டக்கிளை சார்பில் ஈரோடு மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கிளை செயலாளர் ஜோதிமணி தலைமை தாங்கினார். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைதொடர்ந்து, மின்வாரிய அலுவலகம் முன்பு மெயின்ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போராட்டத்தை துவக்கி வைத்தார். இந்த போராட்டத்தில் மின்துறை அமைச்சர் அறிவித்தபடியும், ஒப்பந்தப்படியும் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி 380 ரூபாயாக வழங்கிட வேண்டும்,

நீதிமன்ற வழக்கில் பட்டியலிடப்பட்டுள்ள மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 14 பெண்கள் உட்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோபி: கோபி  மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை மறியல்  போராட்டத்திற்கு திட்டத்தலைவர் பாண்டியன் தலைமையில் 70 ஒப்பந்த ஊழியர்கள்  மேற்பார்வை பொறியாளர் அலவலகம் முன்பு திரண்டனர். மறியல் போராட்டத்திற்கு  காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் அவர்களை முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து  வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

Related Stories: