4 வழி சாலைக்காக வீடுகளை இடிப்பதா? நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

பொன்னேரி,நவ.14: பொன்னேரி அருகே நான்கு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத்துறை  மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பொன்னேரி-பழவேற்காடு வரை நான்குவழி சாலை அமைக்கும் பணி சின்னகவணம் கிராமம் வழியாக நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகளை முப்பது நாட்களுக்குள் காலி செய்யும்படி, பொன்னேரி நெடுஞ்சாலைத்துறையினர், நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னகாவணம் கிராம மக்கள், நான்கு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று பொன்னேரியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் கொதிப்படைந்த கிராம மக்கள், அதன் பின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் ஆகியவற்றை இடித்து விட்டு நான்கு வழி சாலை அமைக்கும் அரசின் இந்த திட்டத்தை உடனடியாக  கைவிடா விட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், எச்சரிக்கை விடுத்துவிட்டு  கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: