டெங்கு, வைரஸ், பன்றி காய்ச்சல் பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் காவல் நிலையங்கள்

திருவள்ளூர், நவ. 14: ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் குவித்து வைத்திருக்கும் பறிமுதல் வாகனங்களில் தேங்கியிருக்கும் மழைநீரில் அதிக அளவில் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. எனவே, காவல் நிலையங்களில் குவித்து வைத்திருக்கும் பறிமுதல் வாகனங்களை ஏலம் விடவோ அல்லது சம்பந்தபட்டவர்களிடம் ஒப்படைக்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. போலீஸ் ஸ்டேஷன்கள் மட்டுமின்றி, போலீஸ் குடும்பங்கள் குடியிருக்கும் குடியிருப்பிலும் பறிமுதல் வாகனங்கள் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் நிறுத்திவைத்திருக்கும் இடத்தை சுற்றி முட்புதர் வளர்ந்து காடுபோல் உள்ளது. வாகனங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழைநீர் தேங்கி உள்ளது. அதில், உற்பத்தியாகும் கொசுக்கள் மக்களை கடிப்பதாலும் மர்ம காய்ச்சல், எலிகாய்ச்சல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது.

குற்றவழக்குகளில் பறிமுதலாகும் வாகனங்களை, ஸ்டேஷன்களில் வழக்கு முடியும் வரை நிறுத்த கட்டாயமில்லை. இதுதொடர்பாக விசாரித்த உயர்நீதிமன்றம், ‘’வழக்கு விசாரணை முடியும் வரை பறிமுதல் வாகனங்களை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தாமல் உரிமையாளரிடம் ஒப்படைக்கலாம். வழக்கு தீர்ப்பை பொறுத்து அவற்றை பறிமுதல் செய்யலாம்’’என உத்தரவிட்டது. இந்த உத்தரவை போலீசார் கண்டுகொள்ளவேயில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் ‘’காயிலான்’’’’ கடைகளாக மாறியுள்ளன. டெங்கு, வைரஸ், பன்றி காய்ச்சல் வேகமாக பரவும் நிலையில் அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் சோதனையிட்டு, டெங்கு பரப்பும் சூழல் இருந்தால் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்கள் பக்கம் இதுவரை எட்டி பார்க்கவில்லை.போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் போலீசாருக்கு, பறிமுதல் வாகனங்களால் டெங்கு கொசுக்களை பரப்புவதற்கு அபராதம் விதிப்பது தானே நியாயம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: