திருத்தணி கோயிலில் புஷ்பாஞ்சலி

திருத்தணி, நவ.14: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 9ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. காவடி மண்டபத்தில் உள்ள ஆறுமுகசாமி சமேத வள்ளி, தெய்வானை சாமிகளுக்கு காலை, மாலையில் பல்வேறு பூக்களால் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபட்டனர். கடந்த 9ம் தேதி தங்ககவசம், 10ம் தேதி திருவாபரணம், 11ம் தேதி வெள்ளி கவசம், 12ம் தேதி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று காலை லட்சார்ச்சனையும் மாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.

முன்னதாக, கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி தலைமையில் பல்வேறு வகையான பூக்கள் மலை கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு லட்சார்ச்சனை செய்யப்பட்டது. இன்று மதியம் உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சியில்  தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ், திருவள்ளூர் மாவட்ட தேமுதிக செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் உள்ள ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8ம் தேதி 9ம் ஆண்டு கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு தினமும் காலையில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், வள்ளி - தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 6வது நாளான நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகன் - வள்ளி - தெய்வானைக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு கோயிலிருந்து சூரபத்மன் புறப்படுதல் நிகழ்ச்சியும் மாலை 5 மணிக்கு முருகன் வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊர் பெரியவர்கள் திருத்தணி ரெட்டியார், ராசமாணிக்கம், கோதண்டன், பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சூரசம்காரம்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக சஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், ஓம்கார மண்டபம் ஆகியவற்றில் 108 முறை சுற்றி வந்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் தங்கவேல் கொண்டு போர்க்கோலத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தார். இதைக்காண பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். மேலும், வீரபாகு வேடம் அணிந்தவர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த வேல் மூலம் 6 அசுரன்களையும் தாக்கினர். இதையடுத்து பிரம்மாண்ட தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு சஷ்டி பாயசம் வழங்கப்பட்டது.இரவு 8 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நான்கு மாடவீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Related Stories: