வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம்

பொன்னேரி, நவ.14: வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஊதிய உயர்வு, போனஸ்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் அரை நிர்வாண  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த    வட சென்னை அனல் மின் நிலையத்தில் தினமம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, பண்டிகை கால  போனஸ், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அனல் மின் நிலைய வாயிலில் நேற்று சிஐடியு மாநில துணை தலைவர் விஜயன் தலைமையில்,  நிர்வாகிகள் நித்யானந்தம், ராஜேந்திரன், பூபாலன் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள்,  தங்களது மேல் சட்டையை கழற்றி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அடையாள அட்டை வழங்க வேண்டும், பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை அடங்கிய அட்டைகளை கழுத்தில் அணிந்திருந்தனர்.‘’தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் அடுத்த கட்டமாக மின் உற்பத்தி பாதிக்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்’’ என ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: