பூதூர் ஊராட்சியின் அவலம் பராமரிப்பு இன்றி பாழாகும் குளங்கள்

புழல், நவ. 14: சோழவரம் ஒன்றியம், பூதூர் ஊராட்சியில் முறையான பராமரிப்பு இல்லாமல் 5 குளங்கள் பாழாகி வருகின்றன. பொதுக்கழிப்பிடம் கட்டி கொடுக்கவும், பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கும் குளங்களை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

சோழவரம் ஒன்றியம், பூதூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெருமாள் கோயில் தெருவில் ஒரு குளம் மற்றும் பூதூர்- நெற்குன்றம் சாலையில் உள்ள சொக்கான் குளம் உள்ளிட்ட 5 குளங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக இந்த குளங்களை சரியாக பராமரிக்காமல் விட்டதால் தற்போது புதர் மண்டிக்கிடக்கின்றன. குறிப்பாக சொக்கான்குளத்தை சுற்றிலும் உள்ள இடத்தை அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இங்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த குளக்கரையில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொதுக்கழிப்பிடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சம்பந்தப்பட்ட சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரையிலும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த குளக்கரையில் பொதுக்கழிப்பிடம் கட்டித்தரவும், பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கும் குளங்களை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: