கஜா புயல் பாதிப்புகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார்

காஞ்சிபுரம், நவ. 14: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயல் கரையை கடக்கும்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் கொண்ட 50 மண்டலக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த அதிகாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தாலுகாக்களில் 2 நாட்கள் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 300 பேர் தங்கும் வகையில் திருப்போரூரில் 2 மீட்பு பாதுகாப்பு மையங்களும், செய்யூரில் 1 மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் இருந்த 691 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. சாய்ந்து கிடக்கும் 1496 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் 3313 இடங்களில் சரிசெய்யப்பட்டுள்ளன. புயலின்போது பாதிப்பு ஏற்பட்டால் மின்வாரியத்தில் முன்னேற்பாடாக 3 பிரிவுகளாக 90 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 60 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் 44 மருத்துவக் குழுக்கள் மற்றும் 90 மருத்துவக் கிடங்குள் தயார் நிலையில் உள்ளன. கால்நடைத் துறை சார்பில் 21 குழுக்களும், புயல் காலத்தில் கால்நடைகளுக்கான தீவனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு பாதுகாப்பு படையினர் 67 பேர், பயிற்சி பெற்ற மீட்பு படையினர் 168 பேர், முதல் தகவல் கொடுப்பவர்கள் 3731 பேர், தன்னார்வலர்கள் 166 பேர் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.  மேலும் முன்னேற்பாடாக 246 பொக்லைன்கள், 156 மரம் அறுக்கும் எந்திரங்கள், 200 படகுகள், 302 ஜெனரேட்டர்கள், 432 பம்ப் செட்கள், 132 நீச்சல் வீரர்கள், 374 பாம்பு பிடிப்பவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பொன்னையா கூறினார். ஆலோசனை கூட்டம்: கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. செங்கல்பட்டு ஆர்டிஓ முத்துவடிவேல் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் உதவி இயக்குனர் (தணிக்கை) சாவித்ரி, திருக்கழுக்குன்றம் தாசில்தார் வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமளா, தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிராமங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை மேடான பகுதியில் தங்க வைப்பது, மக்களுக்கு தேவையான குடிநீரை முன்னதாகவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி வைப்பது, அவர்களுக்கு தேவையான உணவு வழங்குவது உள்ளிட்ட ஆலேசானை வழங்கப்பட்டது.

Related Stories: