காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ள தடை நீட்டிப்பு

காஞ்சிபுரம், நவ. 14: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ள தடை நீட்டிப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது. இதில், பாலாற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம், சென்னை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பாலாற்று படுகையில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், ஆறு பல இடங்களில் கட்டாந்தரையாகவும், புதர் மண்டியும் சீரழிந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், மணல் கொள்ளையில் அரசியல்வாதிகள், ரவுடிகள் என பல தரப்பினரும் ஈடுபட்டனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. மணல் எடுப்பதை தடுக்க, ஆற்றங்கரையோர கிராமப்புற மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதன் அடிப்படையில் அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன் கடந்த 2013ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனாலும், திருக்கழுக்குன்றம், வல்லிபுரம், வாலாஜாபாத், வள்ளிமேடு மாகரல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்தது. இந்நிலையில், தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆற்று படுகைகளிலும் ஓராண்டுக்கு மணல் அள்ளக்கூடாது என கடந்த 2013ம் ஆண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

தொடர்ந்து 2014ம் ஆண்டும், 2015ல் அடுத்த மூன்றாண்டுகளுக்கும் மணல் எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நவம்பர் 12ம் தேதியுடன் முடிவடைந்தது.  மணல் அள்ள தடைக்காலம் இருந்த ஐந்து ஆண்டுகளில், ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தியதாக ஏராளமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. லாரிகள், டிராக்டர், மாட்டு வண்டிகள், சரக்கு வாகனங்கள், டூ வீலர்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமும் வசூலிக்கப்பட்டு வந்தன.

மணல் கொள்ளையில் ரவுடிகள் ஈடுபடுவதால் மாமூல் வாங்குவதும், அதில் ஏற்படும் தகராறில் கொலை சம்பவங்களும் நடைபெற்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சதாவரம் பகுதியில் டூ வீலரில் மணல் அள்ள மாமூல் தராததால் இளைஞரை குத்திக் கொலை செய்ய கோர சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது மணல் அள்ள தடை முடிவடைந்ததால் மாவட்ட நிர்வாகம் என்ன முடிவெடுக்கப் போகிறது என பலரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கேட்டபோது, அரசுப் பணிகள், அரசு தொகுப்பு வீடுகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிபந்தனைகளுடன் மாட்டு வண்டியில் மட்டும் மணல் அள்ள அனுமதி வழங்குவது குறித்து மேலதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  ஆனாலும் அரசிடம் இருந்து முறையாக மறு உத்தரவு வரும் வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளத் தடை நீடிக்கும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: