தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க நிதியுதவி கோரும் மாற்றுத்திறனாளி

காஞ்சிபுரம், நவ. 14: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் சுகனேஷ் (22), மாற்றுத் திறனாளி. இவரின் தந்தை மகேந்திரன், அண்ணன் நவமணி ஆகிய இருவரும் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகின்றனர். சுகனேஷ், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் தேர்வாகி தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் விளையாடி உள்ளார். டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் உள்ளிட்ட சிறப்பிடங்களைப் பெற்றுள்ளார்.

இதுவரை போட்டிகளில் பங்கேற்க செல்வதற்கு உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் சென்று வந்துள்ளார். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 2 மற்றும் 3ம் தேதிகளில் குஜராத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் காஞ்சிபுரம் செவிலிமேட்டில் இருந்து சுகனேஷ், அரக்கோணத்தில் இருந்து அந்தோணி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் சுகனேஷ் குஜராத் செல்வதற்கான பயண கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக பணமில்லாததால், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை நேரில் சந்தித்து, நிதியுதவி கோரி மனு அளித்தார்.

Related Stories: