அரும்புலியூர் கிராமத்தில் பராமரிப்பின்றி பாழாகும் சமுதாய நலக்கூடம்

உத்திரமேரூர், நவ. 14: அரும்புலியூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காததால், சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளது. உத்திரமேரூர் அருகே அரும்புலியூர், குருமஞ்சேரி, பினாயூர், சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, பழவேரி, கரும்பாக்கம்,  களியப்பேட்டை, காவித்தண்டலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களது இல்ல திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் விழா, சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள், சுயஉதவி குழு கூட்டங்கள், கிராம சபை கூட்டம் போன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வசதியாக அரும்புலியூர் கிராமத்தில் கடந்த 2009ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இந்த சமுதாயக் கூடத்தில் கிராம மக்கள் தங்களது சுப நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்தி பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த கட்டிடத்தினை கடந்த 3 ஆண்டுகளாக முறையான பராமரிக்காததால் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. மாலை நேரங்களில் இங்கு சமூகவிரோதிகள் சிலர் மது அருந்துவது, சூதாடுவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த கட்டிடத்தை முறையாக பராமரித்து சுற்றியுள்ள செடிகளை அப்புறப்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: