உடல் பருமன், பரம்பரையாக இருந்தால் உஷார்

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அவரவர் உடல் நலனைக்கூட பராமரிப்பது என்பது குறைந்துவிட்டது என்றே கூறலாம். எப்போதும் வேலை, அலுவலகம் என்றே ஒரு நாளில் பாதியை கழித்துவிடும் பலர், மீதி நேரங்களில் செல்போன்களிலும், லேப்டாப்களிலும் நேரத்தை செலவிடுகின்றனர். உண்ணும் உணவை கூட கண்ணில் பார்க்காமல் லேப்டாப்பையும், இன்டர்நெட்டையும் பார்த்தே சாப்பிடும் காலமாகிவிட்டது. இப்போது வேண்டுமானால் இது நவீனமாக தோன்றலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்தவுடன் நம் உடலில் ஏற்படும் நோய்களை நினைத்து பார்த்தோமானால் இவற்றையெல்லாம் தவிர்த்து நம் உடல் நலனில் அக்கறை கொள்வது அவசியம் என்று தோன்றும். உறவினர் வீடு, நண்பர்கள் வீடு மட்டுமல்ல டீக்கடைக்கு சென்றால் கூட சர்க்கரை போட்டா? சர்க்கரை இல்லாமலா? என்று சகஜமாக கேட்கும் அளவுக்கு ஏராளமானோர் இந்த சர்க்கரை வியாதியால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர்.  சராசரியாக 35 வயதிலேயே இப்போதெல்லாம்  நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயால் அவதிப்பட தொடங்கியுள்ளனர். அன்றாடம் பல்துலக்குவது, குளிப்பது, தலைவாருவது போன்று டயாபட்டீஸ் மாத்திரை எடுத்துக்கொள்வதும், இன்சுலின்போட்டுக்கொள்வதும் கூட வாடிக்கையாகிவிட்டது. நாம் உண்ணும் உணவானது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இந்த குளுக்கோஸ் திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது. இந்த குளுக்கோஸை திசுக்களுக்கு எடுத்துச்செல்வதற்கு இன்சுலின் என்ற ஹார்மோன் பயன்படுகிறது.

கணையத்தில் இருந்து உற்பத்தியாகும் இந்த இன்சுலின் அளவு குறையும்போது குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து திசுக்கள் பெற முடிவதில்லை. இதனால் அவை ரத்தத்திலேயே தங்கி விடுகிறது. இதன் காரணமாக குளுக்கோஸ் என்ற சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது உடலில் பல்வேறு உறுப்புக்களை பாதிக்கிறது. சீரான ரத்தஓட்டத்தையும் தடை செய்கிறது. நோய்கான அறிகுறிகள்:  அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகம், அதிக பசி, உடல் எடை குறைதல், சோர்வு உள்ளிட்டவை சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஆகும். இதுபோன்ற அறிகுறிகளை நாம் கண்டறிந்தவுடன் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். பரம்பரை நோய்: தாய், தந்தை, சகோதரி, சகோதரன் இவர்களில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. காரணம் மரபின் வழியாக இந்த நோய் எளிதில் கடத்தப்படுகிறது. தாய், தந்தை இருவருக்கும் இந்த நோய் இருந்தால் பிள்ளைகளுக்கு 85 முதல் 100 சதவீதம் வர வாய்ப்புள்ளது. யாரேனும் ஒருவருக்கு மட்டும் இருந்தால் பிள்ளைகளுக்கு 40 சதவீதம் இந்த நோய் வர வாய்ப்புள்ளது. இதுபோன்ற அறிகுறிகள் இல்லையே, அதனால் நமக்கு சர்க்கரை வியாதி வராது என்றெல்லாம் கற்பனை செய்யக்கூடாது.

அறிகுறிகள் இல்லாமலும் சிலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சர்க்கரையின் அளவு: பொதுவாக உணவு உண்பதற்கு முன்னர் ரத்தத்தில் சர்க்ரையின் அளவு 70-99 மில்லிகிராம்/ டெசிலிட்டர் ஆகவும், உணவு எடுத்துக்கொண்ட இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் 140மில்லிகிராம்/ டெசிலிட்டர் ஆகவும் இருக்க வேண்டும். இந்த அளவுகளில் மாற்றம் ஏற்படும்போது நமது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாவதை நாம் உணர வேண்டும். இதற்கு மாதம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உண்பதற்கு  முன்னும், உணவு உண்ட பின்னும் சர்க்கரையின் அளவு எப்படி உள்ளது என்பதை  கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Related Stories: