கூடுதல் பணிக்கு சம்பளம் கேட்டு விஏஓக்கள் போராட்டம் சான்று வழங்கும் பணி 5வது நாளாக பாதிப்பு

சின்னசேலம், நவ. 14: சின்னசேலம் தாலுகாவில் சின்னசேலம் தெற்கு, வி.பி.அகரம், மரவாநத்தம், எலியத்தூர், பைத்தந்துறை, ஈரியூர், வி.கிருஷ்ணாபுரம், வி.அலம்பளம், நல்லசேவிபுரம், பாக்கம்பாடி, மாதவச்சேரி தெற்கு, பால்ராம்பட்டு, பரிகம், கரடிசித்தூர் தெற்கு ஆகிய 14 கிராமங்களிலும் விஏஓக்கள் பணியிடம் காலியாக உள்ளது. கடந்த காலங்களில் இந்த காலி பணியிடங்களை பணியில் உள்ள விஏஓக்கள் கூடுதல் பணியாக காலியாக உள்ள கிராமங்களையும் பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு இவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு தீர்மானத்தின்படி தமிழகம் முழுவதும் கடந்த 9ம் தேதி, கூடுதல் பொறுப்பு பார்க்கும் கிராம நிர்வாக அலுவலர்கள், கூடுதல் கிராமத்தின் வருவாய் கணக்குகளை அந்தந்த தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் சின்னசேலம் வட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் விஏஓ காலி பணியிடமாக உள்ள கிராம மக்கள் இணையவழி பட்டா மாற்றம் செய்ய முடியாலும், அத்தியாவசிய தேவைகளுக்காக சிட்டா, அடங்கல் பெற முடியாமலும் அவதிப்படுகின்றனர். மேலும் சாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு உள்ளிட்ட 24 வகையான சான்றுகளையும் பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை பொதுமக்களுக்கு தடையின்றி சான்றுகள் கிடைத்திடும் வகையில் மாவட்ட கலெக்டர் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: