நீர் நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

விழுப்புரம், நவ. 14: விழுப்புரம் நகரில் ஆக்கிரமிப்புகள் அதிடியாக அகற்றப்பட்டன. ஓட்டல், கடைகள் இடித்து தள்ளப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஏரி, நீர் நிலை இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது நகர பகுதியில் உள்ள வாய்க்கால், சாலைகளை ஆக்கிரமித்துள்ள இடங்களையும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். விழுப்புரம் நகரில் நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் எதிரே சுதாகர் நகர் செல்லும் சாலையில் ஓட்டல்கள், கடைகளை வைத்து நீர்வழி பாதை க்கிரமிக்கப்பட்டிருந்தது குறித்து தொடர்ந்து ஆட்சியருக்கு புகார் மனுக்கள் குவிந்தன.இந்தநிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற ஆட்சியர் சுப்ரமணியன் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்ெகாள்ள நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், நேற்று வரை யாரும் அதனை அகற்றிக்கொள்ளவில்லை. இதை தொடர்ந்து தாசில்தார் சையத்மெஹமூத் தலைமையில் வருவாய்த்துறை, நில அளவைத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். அசம்பாவிதம் நடக்காமலிருக்க தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சுதாகர் நகர் செல்லும் வழியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த அதிமுக பிரமுகரின் ஓட்டல் மற்றும் 10க்கும் மேற்பட்ட கடையின் முன் பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் சில கடைகள் முன் இருந்த மேற்கூரைகளும் அகற்றப்பட்டன. அப்போது சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் பேச்சுவார்த்தையின் மூலம் சமாதானப்படுத்தினர்.

 

தொடர்ந்து அந்த பகுதியில் நீர்வழி பாதை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. இப்பகுதியில் 2 கிராம நிர்வாக அலுவலருக்கும், 1 நில அளவைத்துறை ஊழியருக்கும் சொந்தமான கட்டிடம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றியபோது இந்த மூன்று கடைகள் மட்டும் அகற்றப்படவில்லை. அங்கிருந்த சிலர் இது குறித்து தாசில்தார் சையத்மெஹமூத்திடம் தகவல் தெரிவித்த நிலையில், பாரபட்சமின்றி அந்த கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அந்த 3 கடைகளின் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: