தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்

கழுகுமலை, நவ. 14: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்களின்  வெற்றி வேல், வீர வேல் கோஷம் விண்ணை முட்டியது. கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 8ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 5ம் நாளான நேற்று முன்தினம் தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் கிரிவலப்பாதை சுற்றி கும்பிடு சேவை செய்து நேர்ச்சை செலுத்தினர்.

காலை 9 மணிக்கு பாதயாத்திரையாக வந்த சிவகாசி பக்தர்கள், பால்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவல பாதை வழியாக கோயிலை அடைந்தனர். பின்னர் மதியம் 12 மணிக்கு சண்முகருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. சுவாமி கழுகாசலமூர்த்தி வெள்ளி மயில் வாகனத்தில் போர்க்களத்தில் எழுந்தருளினார். முதலில் வந்த பானுகோபன், யானைமுகன், சிங்கமுகன், தர்மகோபன் ஆகிய சூரன்களை வதம் செய்தார். பின்னர் வந்த சூரபத்மனை வதம் செய்தபோது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வெற்றி வேல், வீர வேல் என்ற கோஷம் விண்ணை முட்டியது.  விழாவில்   தொழிலதிபர் முத்துராஜ், ரமேஷ், அதிமுக நகர செயலாளர் முத்துராஜ் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு சீர்பாத தாங்கிகள் சார்பில் கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 16ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் செண்பகராஜ், பரமசிவன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதையொட்டி  கிரைம் பிராஞ்ச் டிசிபி ரமேஷ், கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர்.

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயிலில் சுவாமி சுப்பிரமணியர், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. குறிப்பாக 21 வகையான பொருட்கள் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் தாய் பாகம்பிரியாளிடம் சுப்பிரமணியர் வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியர் சூரசம்ஹாரத்திற்கான புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதனைதொடர்ந்து தேரடி திடலில் சுவாமி சுப்பிரமணியர் சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது.  கஜமுகசூரன், சிங்கமுகசூரன், பாணுகோபன், சூரபத்மன் என 4 உருவில் மாறி மாறி நின்ற சூரனை சுவாமி சுப்பிரமணியர் அடுத்தடுத்து வதம் செய்தார். சம்ஹார முடிவில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கரராமேஸ்வரர் கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு டவுன் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், காலை 11 மணிக்கு சுப்பிரமணிசுவாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை 4.30மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு கோவில்பட்டி பின்புறம் அமைந்துள்ள மைதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் கஜமுக சூரன், சிங்கமுகசூரன், சூரபத்மன், தாரகாசூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இதையடுத்து சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜைகளை சுவாமிநாதபட்டர், செண்பகராமபட்டர், கோபாலகிருஷ்ணபட்டர், சங்கர்பட்டர் ஆகியோர் நடத்தினர். கோயில் செயல்அலுவலர் பாலசுப்பிரமணியராஜா, தலைமை எழுத்தர் ராமலிங்கம், ஜனகல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  விளாத்திகுளம்: விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. 6வது நாளான நேற்று அதிகாலை முதல் விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. மாலை 5 மணியளவில் முருகன், சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணி முதல் விளாத்திகுளம்-மதுரை சாலை, மீனாட்சிஅம்மன் கோயில் தெரு வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விளாத்திகுளம் காய்கறி சந்தை பகுதியில் சூரனின் தலையை வெட்டும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

   செய்துங்கநல்லூர்: கருங்குளம் குலசேகரநாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரர் கோயிலிலில் சூரசம்ஹார விழா வையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. மாலை 5 மணி அளவில் சூரசம்கார நிகழ்ச்சி நடந்தது.  

ஓய்வு பெற்ற நீதிபதி ராமசந்திரன், கருங்குளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் மகராஜன் உள்பட ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டனர்.

Related Stories: