தக்கலை பேட்டை சந்தையில் கழிவு நீருக்கு இடையே விற்கப்படும் காய்கறிகள் தொற்று நோய் பரவும் அபாயம்

தக்கலை,  நவ.14: தக்கலை பேட்டை சந்தையில் கழிவு நீருக்கு இடையே காய்கறிகள்  விற்கப்படுவதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான பேட்டை சந்தையில்  வாரத்தில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் சந்தைகள் கூடுவதுண்டு. இதில்  செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் காய்கறி சந்தை கூடுகிறது. காய்கறிகள்  வாங்க சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். சந்தையினை  சுற்றி குடியிருப்புகள் உள்ளது. இதற்காக  காம்பவுண்ட் சுவர்கள்  அமைக்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைந்திருக்கும்  பகுதியில் இருந்து கழிவு நீர் காம்பவுண்ட் சுவர் வழியாக கசிந்து  சந்தைக்குள் வருகின்றது. குறிப்பாக செப்டிக் டேங்க் கழிவு நீர்  வடிந்தோடுவதாக கூறப்பட்டது. இந்த பகுதியில் சந்தை கழிவுகள் குவித்து  வைக்கப்பட்டிருந்ததால் அதிகமாக மக்களுக்கு தெரியாமல் இருந்தது. எனினும்  வியாபாரிகளுக்கு தோல் அரிப்பு நோய்கள் ஏற்பட்டது.  இதனால் வியாபாரிகள்  நகராட்சியிடம் முறையிட்டனர்.

இது தொடர்பாக கடந்த 8 மாதங்களுக்கு முன்  தினகரனில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் பிறகு நகராட்சி தரப்பில்  சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் இருந்து கடந்த ஒரு மாதமாக கழிவு நீர்  வழிந்தோடுகிறது.

 இந்த நீர் சந்தைக்குள் வருவதால் தரையில் வைத்து வியாபாரம்  செய்யும் காய் கறிகள், வாழைக்குலைகள் மீது விழுகிறது. மேலும் வியாபாரிகளும்,  பொதுமக்களும் இந்த கழிவு நீரை மிதித்து செல்கின்றனர். கழிவு நீரானது  காய்கறிகள், பொதுமக்கள் மீது படுவதால் தொற்று நோய்கள் பரவும் நிலை உருவாகி  வருகிறது.  கடந்த 9ம் தேதி காய்கறி சந்தையின் போது வியாபாரிகள் தரப்பில்  கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நேற்றும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தரை  வாடகை தரமாட்டோம் என வியாபாரிகள் கூறினர். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள்  நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி கூறியுள்ளனர்.

ஏற்கனவே டெங்கு  காய்ச்சல், பன்றி காய்ச்சல் என மக்களின் உயிரை பலி வாங்கும் தொற்று  நோய்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சந்தைக்கு வரும் பொது  மக்கள் மீதும், காய்கறிகளிலும் கழிவு நீர் படுவதால் தோல் வியாதிகள்  உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் நகராட்சி  நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சந்தை  வளாகத்தில் பிற பகுதிகளில்  இருந்து வரும் கழிவு நீர்களை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: