சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும்

நாகர்கோவில், நவ.14 : சர்க்கரை நோய் பாதிப்பை கண்டறிந்து தொடக்க நிலையில் கட்டுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராஜபால் கூறினார்.

நாகர்கோவில் சர்க்கரை நோய் சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் ஆர்.ராஜபால் கூறியதாவது : சர்க்கரை நோய்க்கு தீர்வான இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த டாக்டர் பேண்டிங் பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி (இன்று) உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. தொடக்க நிலையில் இந்த நோய் பற்றிய அலட்சியத்தால், கடைசியில் உயிரிழப்பு நிகழ்கிறது. நீண்ட கால நோய்களில் சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் முதலிடம் வகிக்கின்றன. மனிதனுக்கு நிகழும் அதிகளவு மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு போன்றவை அவசர நிலை தாக்குதல்கள் ஆகும். இவை ஒரே நாளில் வருவதில்லை. இவற்றுக்கான அடித்தளம் நமது உடலில் பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்படுகிறது. நலமுடன் இருக்கும் போது உடல் நலத்தை பற்றி சிந்தித்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம் ஆகும்.

தொற்று நோய்கள் குறித்து நம்மிடையே இருக்கும் விழிப்புணர்வு, நீண்ட கால நோய்கள் குறித்து இல்லை. சர்க்கரை நோய் உடலில் உள்ள ரத்த குழாய்களை பாதிப்பதால் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. சர்க்கரை நோய்க்கு ெதாடக்க காலத்தில் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. பலரும் தொடக்க நிலையிலேயே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தவறி அபாய நிலைக்கு வந்து விடுகிறார்கள். இன்றைய நிலையில் சர்க்கரை நோய் கட்டுப்பாடு ஒரு சவாலாகவே இருக்கிறது. எந்த பாதிப்பும் இன்றி இயல்பு நிலையில் இருக்கும் போது சர்க்கரை நோய் சிகிச்சையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். வரும் முன் காப்பது மிக சிறந்தது ஆகும். சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் பாதிப்பின்றி வாழலாம். முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள், யோகா மற்றும் மறு பரிசோதனை சர்க்கரை நோய் சிகிச்சையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: