நாகர்கோவில் கம்ப்யூட்டர் மையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சோதனை

நாகர்கோவில், நவ.14 : நாகர்கோவிலில் கம்ப்யூட்டர் மையத்தில் ஐஆர்சிடிசி அனுமதி பெறாமல் ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்து விற்பனை செய்து வந்ததாக ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர். நாகர்கோவில் பகுதியில் ரயில்வே டிக்கெட்கள் ஆன்லைனில் முறைகேடாக புக் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாகவும், முகவருக்கான அனுமதி ஏதும் பெறப்படாமல் நடைபெற்று வருவதாகவும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அன்ட் டூரிசம் கார்பரேஷன் (ஐஆர்சிடிசி)க்கு தெரியவந்தது. இதனையடுத்து ஐஆர்சிடிசி சார்பில் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க திருவனந்தபுரம் ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையின் திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு படையினர் நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் சாலையில் கன்கார்டியா பள்ளி அருகே உள்ள கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் ரயில்வே டிக்கெட்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் இந்த கம்ப்யூட்டர் மையத்தில் சோதனையிட வாரன்ட் பெற்றனர்.

பின்னர் நேற்று காலை முதல் கன்கார்டியா பள்ளி அருகே உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் சோதனையிட்டனர். பிற்பகல் வரை சோதனை நீடித்தது. இந்த கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து கணினிகள் வாயிலாக 15க்கும் மேற்பட்ட ஐடிக்கள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் டிக்கெட்கள் புக் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ரீகன் என்பவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். டிக்கெட் புக்கிங் செய்ய பயன்படுத்திய கணினியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே சட்டத்தின் 143 வது பிரிவின்படி ரயில்வே டிக்கெட்களை ரயில்வேயின் முகவருக்கான அனுமதியில்லாமல் அதிக அளவில் புக் செய்து விற்பனை செய்வது குற்றம் ஆகும். இதனால் ரயில்வேக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. இங்கும் அதுபோன்று நடந்திருப்பதாக ஐஆர்சிடிசி தரப்பில் புகார் தெரிவித்ததால் நீதிமன்ற அனுமதி பெற்று சோதனை நடத்தி கைது செய்துள்ளோம். இங்கு 15க்கும் மேற்பட்ட ஐடிக்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் டிக்கெட் புக் செய்யப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்களையும் சேகரித்துள்ளோம்.’ என்றனர்.

Related Stories: