17ம் தேதி சபரிமலை சீசன் தொடக்கம் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்

நாகர்கோவில், நவ. 14: கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ ஆஸ்டின் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வருகிற 17ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் கோயில்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை தருவார்கள். ஜனவரி மாதம் இறுதி வரை லட்சகணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் கடமை ஆகும். எனவே பக்தர்களின் வசதிக்காக தற்காலிகமாக தெரு விளக்கு வசதி, சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் தினந்தோறும் கழிவுநீர் ஓடைகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். கடற்கரையில் பக்தர்கள் குளிப்பதற்காக கூடுதல் வசதி, கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு கூடுதலாக தற்காலிகமாக காவலர்களை நியமனம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதுபோன்ற அடிப்படை தேவைகளை வருகிற 17ம் தேதிக்கு முன்பாக செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: