கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கொச்சுவேளிக்கு நீட்டித்தால் போராட்டம்

நாகர்கோவில், நவ.14:  குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெயர் மாற்றி கொச்சுவேளி பயணிகள் ரயிலாக நவம்பர் 15ம் தேதி முதல் இயக்கப்பட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக உள்ளது. 2014ம் ஆண்டு முதல் கன்னியாகுமரி - பெங்களூர் ரயிலின் பெட்டிகளை கொண்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதனால் காலதாமதமாக இந்த ரயில் சென்னைக்கு சென்று வந்தது. அதனால் இந்த திட்டத்தை ரத்து செய்து தனித்தனி ரயில் பெட்டிகளை கொண்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆகஸ்ட் முதல் தனி ரயில் பெட்டிகளாக இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இடநெருக்கடி என்று காரணம் காட்டி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கொச்சுவேளி பயணிகள் ரயிலாக மாற்ற முடிவு செய்துள்ளது ரயில்வே நிர்வாகம். இப்படி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கொச்சுவேளி பயணிகள் ரயிலாக இயக்குவதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்படும் நேரம் தாமதமாகும் சூழ்நிலை உருவாகும்.

 இட நெருக்கடி என்று சுட்டிக்காட்டி கன்னியாகுமரி என்ற பிரசித்தி பெற்ற ஒரு பெயரை அழித்துவிட ரயில்வே நிர்வாகம் நினைப்பது சரியல்ல. இடநெருக்கடியை எப்படி தீர்ப்பது என்ற ஆலோசனைகளை வழங்குவது சரியாக இருக்கும். கன்னியாகுமரி என்ற பெயர் தாங்கிய வண்டி குமரி மாவட்டத்தின் பெருமை என்று பயணம் செய்கின்ற ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். இதற்கு பாதகம் வந்தால் குமரி மாவட்ட மக்களை அலட்சியப்படுத்துவது போன்றதாகும். இந்த திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் ரயில்வே துறையையும், மத்திய அரசையும் எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.  மேலும் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கொச்சுவேளி வரை நீட்டிக்க கூடாது என்று கோரிக்கை வைத்தேன்.

 அதற்கு உடனடியாக மத்திய அமைச்சரும் நீட்டிக்கப்படமாட்டாது என்று உறுதி தந்தார். இதில் மத்திய அரசும், மத்திய அமைச்சரும் தலையிட்டு உடனடியாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கொச்சுவேளி வரை நீட்டிப்பதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று குமரி மாவட்ட திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய மோசமான எண்ணங்களுடன் செயல்படுகின்ற ரயில்வே நிர்வாகத்திற்கு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பிரச்னையில் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களின் ஆதரவோடு ரயில்ேவ துறையை கண்டித்து மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: