புதுவையில் மீண்டும் ஸ்பாட் பைன்

புதுச்சேரி, நவ. 13: புதுவையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ஸ்பாட் பைன் விதிக்கும்படி கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது. கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார். போக்குவரத்து செயலர் ஷரன், காரைக்கால் சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், போக்குவரத்து எஸ்பி மாறன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பேடி வாட்ஸ் அப் பதிவில் கூறியிருப்பதாவது:  புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல்களை போக்குவரத்துத்துறையும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து கண்காணிக்க உள்ளனர். இவர்கள் விதிமீறுவோர் மீது ஸ்பாட் பைன் விதிக்க உள்ளனர். கடந்த 2015 அரசாணையின்படி சப்-இன்ஸ்பெக்டர், வாகன ஆய்வாளர்கள் ஸ்பாட் பைன் விதிப்பார்கள். அபராத விதிப்பை கணினியில் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் தவறிழைப்போர் மீது அபராதத்தை அதிகப்படுத்த வேண்டும்.

 இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணிப்பது, அதிவேகத்தில் வாகனத்தில் பயணிப்பது, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, வாகன நிறுத்தத்தில் மோசமாக வாகனம் நிறுத்துவது, வாகனம் நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்கள் நிறுத்துவது போன்றவற்றுக்கு அபராதம் விதிக்கப்படும்.

சாலை விதிகளை கடைபிடிப்பது உங்களுக்காக மட்டுமின்றி சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்காகவும்தான். புதுச்சேரியில் விபத்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகம். அதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஸ்பாட் பைன் முறையை தீவிரமாக அமல்படுத்தும்பட்சத்தில் புதுவையில் விபத்துகள் வெகுவாக குறையும் எனவும், இதனை போலீசார் பாரபட்சமின்றி தீவிரமாக அமல்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: