இரவு நேரங்களில் நொச்சியூரணியில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

ராமநாதபுரம், நவ.12:   உச்சிப்புளி அருகே இரவு நேரங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மண்டபம் யூனியனில் உச்சிப்புளியை அடுத்துள்ளது பிரப்பன்வலசை, சுந்தரமுடையான் கிராமங்கள். தேசிய நெடுஞ்சாலையின் அருகிலேயே இந்த கிராமங்கள் அமைந்துள்ளதால் பாயின்ட் டூ பாயின்ட், விரைவு பஸ்களை தவிர இரவு நேரங்களில் அனைத்து பஸ்களும் பஸ் நிறுத்தத்தில் நின்று சென்று வந்தன. தற்போது சில அரசு பஸ்களை தவிர அனைத்து பஸ்களிலும் பாயின்ட் டூ பாயின்ட் என்று எழுதப்பட்டுள்ளதால் எந்த டிரைவர்களும் பிரப்பன்வலசை, சுந்தரமுடையான் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவது கிடையாது.

இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். பாயின்ட் டூ பாயின்ட் என்று எழுதப்படாத பஸ்களிலும் ஒருசில கண்டக்டர்கள் சாக்பீசால் பாயின்ட் டூ பாயின்ட் என்று எழுதிக்கொண்டு சம்மந்தப்பட்ட பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்கின்றனர். பிரப்பன்வலசை கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் நொச்சியூரணி கிராம ஊராட்சி உள்ளது. இரவு நேரத்தில் நொச்சியூரணிக்கு செல்லும் மக்கள் பிரப்பன்வலசையில் இறங்கினால் மட்டுமே தங்கள் கிராமத்திற்கு நடந்து செல்ல முடியும். இரவு நேரங்களில் அனைத்து அரசு பஸ்களும் பிரப்பன்வலசையில் நிற்காமல் செல்வதால் நொச்சியூரணிக்கு செல்லும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதேபோல் சுந்தரமுடையான் கிராமத்தில் இறங்கினால் மட்டுமே ஊருக்குள் செல்லமுடியும்.

நொச்சியூரணி சாத்தையா கூறுகையில், அனைத்து அரசு பஸ்களிலும் பிபி என்று எழுதிக்கொண்டு இரவு நேரங்களில் பிரப்பன்வலசையில் நிற்காமல் செல்கின்றனர். இதனால் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட போக்குவரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் விரைவு பஸ்களை தவிர கிராம பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ராமநாதபுரத்தில் ஏறினால் சம்மந்தப்பட்ட பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories: