மாவட்டம் முழுவதும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க கூடாது

ராமநாதபுரம், நவ.12: உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரத்தில் நடந்த உர விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உர விற்பனையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்து பேசுகையில், அரசு நிர்ணயத்துள்ள விலையில், உரங்களை அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்க வேண்டும். உரக்கடைகளில் உரம் இருப்பு, விலை விபரம் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும். உரக்கட்டுப்பாட்டு சட்டத்திற்குட்பட்டு உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விற்பனை முனை இயந்திரம் மூலம் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

உர விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான வேளாண்மை துறை, வருவாய் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் அடங்கிய 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு தொடர்ந்து உர விற்பனை நிலையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் வேளாண்மை இணைஇயக்குநர் சுசிலா, உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) சேக்அப்துல்லா, தனியார் உர உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: