திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

திருச்சி, நவ.8: திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி கி.அ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவகல்லூரியில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் வலியுறுத்தி கலெக்டர், சுகாதார துறை அமைச்சர் மற்றும் செயலாளர், டீன் ஆகியோருக்கு மனு அளித்திருந்தனர். ஆனால் மனு குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் பயிற்சி டாக்டர்கள் மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த 70 பேர் திருச்சி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன்பு அமர்ந்து முற்றுகை செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பயிற்சி டாக்டர் தரப்பில் கூறுகையில்,  பயிற்சி மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கும் போது கையுறை தருவதில்லை. சிரிஞ்சுகள் கேட்டாலும் ஸ்டாக் இல்லை என கூறிவிடுகின்றனர். தொடர் மனஅழுத்தத்தால் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி செய்தார். டீனை பார்க்க அனுமதிப்பதில்லை. எங்களிடம் மாதம்தோறும் ரூ.1000 வசூலித்து வருகிறார்கள். எதற்காக வசூலிக்கப்படுகிறது என்ற தகவல் எங்களுக்கு தரப்படவில்லை. தொடர்ச்சியாக 48 மணி நேரம் வேலை பார்க்க அச்சுறுத்தப்படுகிறது. செவிலியர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் வேலைகளையும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. எனவே எங்களை பற்றியும் மருத்துவதுறை பற்றியும் கவலைப்படாது இருக்கும் எங்கள் கல்லூரி முதல்வர் அனிதாவை மாற்றி வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டீன் அனிதா பயிற்சி டாக்டர்களிடம் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தவிர மற்ற பிரிவுகளில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   

Related Stories: