தீபாவளி முடிந்து ஊர் திரும்பியதால் திருச்சி பஸ், ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

திருச்சி, நவ.8:  தீபாவளி முடிந்து மக்கள் சொந்த ஊருக்கு திரும்பியதால் திருச்சி மத்திய பஸ்நிலையம், ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்ல குறைவான நேரம் என்பதை காட்டிலும் பஸ், ரயில் போக்குவரத்து சேவை எளிதாக கிடைக்கும். அந்த வகையில், திருச்சி மத்திய பஸ்நிலையம், ரயில்நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். தீபாவளி, பொங்கல் போன்ற விழா காலங்களில் வழக்கத்தைவிடவும் இரு மடங்காக இருக்கும். இதனை காரணம் காட்டி ஆம்னி மற்றும் டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த தீபாவளி மற்றும் பொங்கல் காலங்களில் மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் அருகில் ஆகிய இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் செல்லும் பயணிகள் இங்கிருந்து பஸ் ஏறிச் செல்வார்கள். இதனால் பயணிகள் கூட்டம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த 3ம் தேதி முதல் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியக்கூடிய பயணிகள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் திருச்சிக்கும் மற்ற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் காலை வரை அதிகரிக்க துவங்கியது. 4 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று காலை முதல் பயணிகள் தங்களின் பணியிடங்களுக்கு கிளம்பிச் சென்றனர். இதனால் நேற்றிரவு திருச்சி மத்திய பஸ்நிலையம், ஆம்னி பஸ்நிலையம், தற்காலிக பஸ்நிலையம், ரயல்நிலையம் போன்ற இடங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதேபோல திருச்சியில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் ஹவுஸ்புல் என்பதால் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் கூட்டம் அலைமோதியது. மேலும் திருச்சி வழியாக இரவு நேரங்களில் சென்ற அனைத்து ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் படிக்கட்டுவரை நின்று கொண்ேட பயணம் செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்  வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அரசு பஸ்களிலேயே செல்ல விரும்பியதால் திருச்சி மத்திய பஸ்நிலையம் பகுதிகளில்  பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில் அரசு பஸ்களில் பிபி, எக்ஸ்பிரஸ்,  இடைநில்லா பேருந்து என்ற போர்வையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனவே பெரும்பாலான பயணிகள் தாங்கள் ஏமாற்றப்படுவது கண்டு பணியிலிருந்த  அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் ரயில்வே இடத்தில் ஆம்னி பஸ்நிலையம்  அமைக்கப்பட்டதால் மத்திய பஸ்நிலையத்தில் ஆம்னி பஸ்களால் ஏற்படும்  போக்குவரத்து நெருக்கடி முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

Related Stories: