குப்பை மேடாக மாறிவரும் பழவனங்குடி பாசன வாய்க்கால்

திருவாரூர், நவ.8: திருவாரூரில் பொது பணி துறையினரின் அலட்சியம் காரணமாக பழவனங்குடி பாசன வாய்க்கால் குப்பை மேடாக மாறி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுபாட்டில் இருந்து வரும் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் என அனைத்தும் ஆக்கிரமிப்பு காரணமாக அதன் பரப்பளவு சுருங்கி வருவதை பொதுப்பணி துறை அதிகாரிகள் ஏதோ ஒரு காரணத்தினால் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் நகரில் செல்லும் ஓடம்போக்கி ஆற்றின் கரையோரத்திலும் இருபுறமும் அரசியல் வாதிகள் முதல் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் தங்கள் இஷ்டத்திற்கு ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து மிகப்பெரிய அளவில் கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதுமட்டுமின்றி இந்த வர்த்தக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகளுமே இந்த ஆறுகள் மற்றும் பாசனவாய்க்கால்களில் மலைபோல் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசப்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது.இந்நிலையில் திருவாரூர் நகரில்  பேருந்து நிலையம் அருகே ஓடம்போக்கி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் பழவனங்குடி பாசன வாய்க்காலை அடிப்படையாக கொண்டு பழவனங்குடி, கொச்சக்குடி, கூத்தங்குடி,  எழுவேலி, இருவேலி, மருதப்பட்டினம், பிளாவடிமூளை மற்றும் நத்தம் உட்பட 8 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த பாசன நீரை பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சாகுபடி செய்து வந்த நிலையில், ஆக்கிரமிப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக கடந்த 7 வருடமாக தண்ணீர் வராததன் காரணமாக பல்வேறு விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள சுமார் 700 ஏக்கரில் மட்டும் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கும் நடப்பாண்டில் இந்த வாய்க்காலில் தண்ணீர் விடாததன் காரணமாக விவசாயிகள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதனை பொதுப்பணித் துறை அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கடந்த மாதம் 5ம் தேதி திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கிடாரங்கொண்டான் என்ற இடம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட பொது பணி துறையினர் வாய்க்காலை சுத்தம் செய்து நீர் விட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது ஒரு மாத காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாதததால் இந்த வாய்க்காலை உடனே சுத்தம் செய்து நீர் விடாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: