கோழி வளர்ப்பு திட்டத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் : திருவாரூர் கலெக்டர் அறிவிப்பு

திருவாரூர், நவ. 8: திருவாரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் கோழி வளர்ப்பு திட்டத்திற்கு பெண்  பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கும்  தலா 200 பயனாளிகள் வீதம் மொத்தம் 2 ஆயிரம்  பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.  வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற  பெண்களின் வாழ்வாதாரத்திற்காக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் அப்பெண்களை தொழில் முனைவோராக மாற்றி  நிலையான வருமானம் கிடைத்திட இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு பயனாளிகள் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழ்மையான பெண்களாக இருப்பதுடன் விண்ணப்பத்தில் வறுமை கோடு எண்ணை அவசியம் குறிப்பிட வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி, உடல் ஊனமுற்றோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கை, சமூகத்தால் மற்றும்  தனி நபர்களால் கூட்டாக அநீதி இழைக்கப்பட்டவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தால் ஒடுக்கப்பட்டோர் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள் மற்றும் கோழி வளர்ப்புத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயனடைந்தவராக இருத்தல் கூடாது. எனவே தகுதியும், விருப்பமமுடைய பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை  நேரில் தொடர்பு கொண்டு இதற்கான விண்ணப்பங்களை பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: