கீழவாசல் மீன் மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு

தஞ்சை, நவ. 8:  தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளாக பராமரிப்பு செய்யாததால் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதுடன் வாகன நெரிசலால் பொதுமக்கள், வியாபாரிகள்  அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை அண்ணா சிலையிலிருந்து சிறிது தொலைவில் கிழக்கு பகுதியில் மீன் மார்க்கெட் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இயங்கி வந்தது. பின்னர் பழைய மாரியம்மன் கோயில் செல்லும் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே புதிதாக மீன் மார்க்கெட் மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு 2007ம் ஆண்டு திறக்கப்பட்டது. மீன் மார்க்கெட் திறக்கப்பட்டு இதுவரை ஒருமுறைகூட பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் மார்க்கெட் சிதிலமடைந்து காட்சியளிக்கிறது.மார்க்கெட் உள்ளே நுழையும்போது கழிவுநீர், சாலை முழுவதும் வழிந்தோடி வருகிறது. தற்போது கழிவுநீரில் நடந்து தான் மார்க்கெட் உள்ளேயே செல்ல முடியும். மழை பெய்துவிட்டால் மார்க்கெட், நீரில் மிதக்கும் நிலை உள்ளது. மேலும் மார்க்கெட்டின் இருபுறமும் உள்ள கழிவுநீர் வடிகால் அடைத்து கொண்டு குளம்போல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மார்க்கெட்டின் மேற்கூரைகள் அனைத்தும் உடைந்துள்ளது. தற்போது பருவமழை துவங்கி விட்டதால் மழைநீர் ஓட்டைகளில் ஒழுகி மார்க்கெட் உள்ளே பொதுமக்கள் தலையில் கொட்டுகிறது. மேலும் மீன் வாங்க வரும் பொதுமக்களும் மழையில் நனையும் நிலை நீடித்து வருகிறது.

 

மார்க்கெட்டுக்கு வெளியூரில் இருந்து மீன் ஏற்றி வரும் வாகனங்களில் இருந்து மீன் பெட்டிகள் சாலையிலேயே வைத்து பிரித்து இறக்கப்படுகிறது. இதனால் அதிலிருந்து வடியக்கூடிய ஐஸ் கழிவுநீர், சாலையில் ஓடி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சில மீன் வியாபாரிகளின் சேமிப்பு கிடங்காக இவ்வாகனங்கள் அங்கேயே நாள் கணக்கில் நிறுத்தி விடுவதால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் நிறுத்த இடமின்றி தவித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களுக்கான ஒப்பந்தம் எடுப்போர், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அதற்கான கட்டணத்தை வசூலிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்த இடம் ஒதுக்கி தர மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் எங்கே வேண்டுமானாலும் வாகனங்களை நிறுத்துவதால் ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் மார்க்கெட் அருகே வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன நிறுத்துமிடத்தின் ஒரு பகுதி தனிநபரின் ஆக்கிரமிப்பில் உள்ளதும் கடும் இடநெருக்கடிக்கு காரணமாக உள்ளது.

இதுகுறித்து விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாநகர செயலாளர் வெற்றி கூறும்போது, மீன் மார்க்கெட் திறந்து 10 ஆண்டில் ஒருமுறை கூட பராமரிப்பு பணி நடைபெறவில்லை. 3 ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் பராமரிப்பு பணிகள் நடப்பதாக கணக்கு மட்டும் காண்பிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மார்க்கெட் பகுதியில் ஒருபுறம் தனியார் ஆக்கிரமிப்பும், மறுபுறம் மீன் வியாபாரிகளின் லாரிகள் ஆக்கிரமிப்புகளால் சிக்கி தவிக்கிறது. இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மார்க்கெட்டில் இருந்து கழிவுநீர் செல்ல வழியின்றி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. டெங்கு கொசுக்கள் இங்கு உற்பத்தியாகும் நிலையில் அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன் கழிவுகளை தினம்தோறும் மாநகராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்துவதில்லை. அப்படியே வந்தாலும் கழிவுகளை அள்ளி அருகில் உள்ள தொட்டியில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் 24 மணி நேரமும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேட்டின் பிடியில் தஞ்சை மீன் மார்க்கெட் சிக்கி தவிக்கிறது. மீன் மார்க்கெட்டின் வாசலுக்கே மீன் கடைகளை கொண்டு வந்து விடுகின்றனர். இவற்றை ஒழுங்குப்படுத்த மாநகராட்சி தயாராக இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க எத்தனை முறை மனு கொடுத்தும், தொலைபேசி வாயிலாக புகார் செய்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக தஞ்சாவூர் மாநகராட்சி உள்ளது. மாநகராட்சி ஆணையர் முதல் சுகாதாரத்துறை, பொறியியல் துறை என அனைத்துத்துறையும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. மாநகராட்சியின் உறக்கத்தை களைக்க விரைவில் மக்களை திரட்டி மீன் மார்க்கெட் முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார். மீன் மார்க்கெட் திறந்து 10 ஆண்டில் ஒருமுறை கூட பராமரிப்பு பணி நடைபெறவில்லை. 3 ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் பராமரிப்பு பணிகள் நடப்பதாக கணக்கு மட்டும் காண்பிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

Related Stories: