மயிலாடுதுறையில் தொற்றுநோய் பரவும் அபாயம்

மயிலாடுதுறை, நவ.8:   மயிலாடுதுறையில் கழிவுநீர் மழைநீர் வடிகால் மூலம் குளத்தில் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.மயிலாடுதுறை 13வது சந்திரிகுளத்தெருவில் உள்ள ஒரு ஆள் நுழைவுத்தொட்டியிலிருந்து  24 மணி நேரமும் வெளியேறும் பாதாள சாக்கடைக் கழிவுநீர் சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் வழியாக சென்று சந்திரிகுளத்தில் நேரடியாக கலக்கிறது. இந்த சந்திரிகுளத்தின் தென்புறத்தில் கிட்டப்பா நகராட்சி மேனிலைப்பள்ளி இயங்குகிறது. மற்ற 3 பக்கங்களிலும் தெருக்கள் உள்ளன.  இந்தக் கழிவுநீர் கடந்த ஒருமாதமாக வெளியேறியதுடன், கடந்த ஒரு வாரகாலமாக பகல், இரவு இரு வேளையிலும் வெளியேறி வருவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது.  இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் பலருக்கு  காய்ச்சல் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். ஒரு சிலர் தனியார் மருத்துவரிடம் காண்பித்து செல்கின்றனர்.இந்த சந்திரிகுளத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கழிவுநீரால் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுறை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாதாள சாக்கடை பராமரிப்புப் பணியை தனியார் செய்து வருகின்றனர். நேரடியாக நகராட்சி இந்த பணியை செய்யாமல் தனியாரிடம் தாரை வார்த்துள்ளதால் தனியார் அலட்சியம் காட்டி வருகின்றனர்.  மயிலாடுதுறையில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அவற்றை சரி செய்யாமல் ஆங்காங்கே கழிப்பறை நீர் வெளியேறுவது வாடிக்கை.உடனடியாக மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் மற்றும் நாகை மாவட்ட நிர்வாகம் இப்பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டு உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  மேலும் இந்தக் கழிவுநீர் இனிமேல் வெளியேறாமல் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை

விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீரேற்று நிலையம் ஹாஜியார் நகரிலிருந்து  கழிவு நீரேற்றும்போது அண்ணாவீதியில் உள்ள ஒரு ஆள்நுழைவுத்தொட்டியிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி வந்தது.  அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் துர்நாற்றம், தாங்க முடியாததால் தூக்கத்தை தொலைத்தனர்.  நேற்று முன்தினம் இரவு திடீரென்று அண்ணாவீதியில் உள்ள 2 ஆள் நுழைவுத்தொட்டியிலிருந்து போர்வெல்மூலம் வெளியேற்றப்படுவது போன்ற கழிவுநீர் அனைத்தும் விடிய விடிய வெளியேறியது. மழை பெய்ததால் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் சாலை முழுவதும் பரவியது.

 அத்துடன் வெளியேறிய பாதாளசாக்கடை கழிவறை நீர் கிட்டப்பா நகராட்சி மேநிலைப்பள்ளியின் பின்புறம்  உள்ள 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திரிகுளத்தில் கலந்தது. நேற்று முன்தினம் இரவில் ஆரம்பித்த அந்த பாதாள சாக்கடைநீர் வெளியேற்றம் நேற்று மதியம் 3 மணி வரை நடைபெற்று

குளத்தில் கலந்ததுஅந்தக்குளத்தை சுற்றி நூற்றுக்கணக்கான வீடுகளும், பள்ளிகளும் உள்ளன. கழிப்பறை நீர் குளத்தில் கலந்துள்ளதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.  உடனடியாக மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குளத்தில் கழிவுநீர் வேளியேறியதால் சுகாதார பாதிப்பு ஏற்படுமா என்பதை சுகாதார துறை மூலம் ஆய்வு செய்து அதை சரி செய்யவேண்டும். மேலும் இனிமேல் இந்த ஆள் நுழைவுத்தொட்டி மூலம் கழிப்பறைநீர் வெளியேறுவதை தடுக்கவேண்டும். நாகை மாவட்ட நிர்வாகம் மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டம் குறித்தும் அது பராமரிக்கப்படும் பணி குறித்தும் ஓர் ஆய்வினை மேற்கொண்டு பாதாள சாக்கடையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மயிலாடுதுறை மக்கள் கேட்டுக்

கொண்டுள்ளனர்.

Related Stories: