குழந்தைகள், முதியோர்கள் அவதி பனிக்கு பரவும் வைரஸ் காய்ச்சல்

மானாமதுரை, நவ.8: இரவு நேரத்தில் கடும் பனி பொழிவு காணப்படுவதால் வறட்டு இருமல், வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக

பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. ஆனால் மானாமதுரை வட்டாரத்தில் எதிர்பார்த்த பருவமழை இல்லை. மேலும் தொடர்ந்து விட்டு, விட்டு சாரல்மழை பெய்து வருவதால் இரவில் மழையும், பகலில் வெயிலும் என சூழ்நிலை மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளித்தொந்தரவு, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமான முதியவர்கள், குழந்தைகள் வந்து செல்கின்றனர். இதேபோல் மாவட்டத்தில் காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் பனிப்பொழிவால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பகலில் வெயில் அதிகம் காணப்படுகிறது. இதுபோன்ற காரணத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவி வருகிறது.

சுகாதாரத்துறையினர் மானாமதுரை வட்டாரத்தில் கீழப்பசலை, கொன்னக்குளம், மாங்குளம், கல்குறிச்சி உள்ளிட்ட சில கிராமங்களில் பெயரளவில் ஆய்வு செய்துவிட்டு திரும்பியுள்ளனர். அங்கெல்லாம் தினமும் சுகாதார பணிகள் நடைபெறவில்லை. மேலும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் ஓய்ந்திருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிலவேம்பு கசாயத்தை வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: