தொற்றுநோய் அபாயம் குறிஞ்சி நகரில் தெருவில் ஓடும் கழிவுநீர்

ராஜபாளையம், நவ.8: ராஜபாளையத்தில் தெருவில் சாக்கடை ஓடுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தொற்றுநோய் பீதியில் உள்ளனர்.

ராஜபாளையம் சம்பந்தபுரம் 11 வது வார்டு பகுதியில் உள்ளது குறிஞ்சி நகர். இந்த பகுதியில் கடந்த 10 வருடமாக நகராட்சி சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் இருப்பதால் தெருக்கள் முழுவதும் சாக்கடைகள் ஓடுகிறது. ஆங்காங்கே மலைபோல் குப்பைகளும் தேங்கியுள்ளது. குறிப்பாக நகராட்சி சார்பில் குப்பைகளை சேகரிக்க வருபவர்களும் தெருமுனையில் சாக்கடைகள் ஓடுவதால் தெருவுற்குள் நுழைய முடியாமல் வந்த பாதையிலே திரும்பி சென்று விடுகின்றனர். மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த தெருக்களில் டெங்கு காய்ச்சல் பரவியபோதும் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை நேரில் தெருக்களை ஆய்வு செய்து உடனே வாறுகால்கள் வசதியும் சாலை வசதியும் ஏற்படுத்தி தர உத்தரவிட்டனர். ஆனால் அதிகாரிகளோ இன்று வரை குறிஞ்சி நகர் பகுதிக்குள் வருவதே கிடையாது. மாறாக டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் மஸ்தூர் பணியாளர்கள் வீடு வீடாக வந்து சோதனையை மட்டுமே செய்து வருகின்றனர். அவர்களும் தெருக்களில் நுழையும் போது சாக்கடையில் நடந்து தான் வரவேண்டும். நிலைமை இப்படி இருக்கையில் இந்த பகுதியில் நகராட்சி ஊழியர்கள் பலரும் குடியிருந்தும் வருகின்றனர். இவர்கள் மூலமாக பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் குறிஞ்சி நகருக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்க முன் வருவதில்லை. எனவே தற்போது பரவிவரும் மர்மகாய்ச்சல் இந்தப்பகுதிக்குள் பரவுவதற்கு முன்பாவது அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து தர முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘குறிஞ்சி நகரின் அவல நிலை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தொற்றுநோய் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். எங்கள் பகுதியை சுகாதாரமானதாக மாற்ற வேண்டும்’’ என்றனர்.

Related Stories: