ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை அதிமுகவினருக்கு மட்டும் அனுமதியா?போலீசார் மீது பொதுக்கள் அதிருப்தி

தேனி, நவ. 8: ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கும் போலீசார், அதிமுகவினருக்கு மட்டும் கிராமிய கலைநிகழ்ச்சி என்ற பெயரில் அனுமதி வழங்குவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

திருவிழாக்காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆரம்ப காலங்களில் இந்நிகழ்ச்சியின்போது, மேடை நடன கலைஞர்கள் நடிகர்கள் போன்று வேடமணிந்து திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடனஅசைவுகளுடன் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்விப்பர்.

இந்நிலை கடந்த சில ஆண்டுகளில் ஒரு சில நடன கலைஞர்கள் மேடை நடன நிகழ்ச்சியில் ஆபாசத்தை புகுத்தினர்.இதன்விளைவாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தேனியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டாள். இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து இத்தகைய நடனத்திற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.

தேனி மாவட்டத்தில் இத்தகைய ஆடல், பாடல் கலைநிகழ்ச்சியை நம்பி சுமார் 100 கலைஞர்கள் உள்ளனர். இவர்களில் பலர் நேர்மையாக எவ்வித ஆபாசமுமின்றி நடன நிகழ்ச்சி நடத்துகிறோம் என அனுமதி கேட்டாலும் போலீசார் எந்த விழாக்களிலும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதில்லை. இதற்காக பலமுறை நடன கலைஞர்கள் கலெக்டர், எஸ்.பியிடம் மனு அளித்தும் பலனில்லை.

ஆனால், சமீபகாலமாக அதிமுகவினர் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்ப்பதற்காக தடைவிதிக்கப்பட்ட ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு போலீசாரே, அதிமுக நிர்வாகிகளிடம் நாட்டுப்புற கிராமிய நடன கலைநிகழ்ச்சி என விண்ணப்பித்தால் அனுமதி வழங்குவதாக கூறி அனுமதி வழங்கி வருகின்றனர். ஆனால் அதிமுக பொதுக்கூட்ட மேடைகளிலும் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளில் ரிகார்டு டான்ஸ் குத்தாட்டத்துடன் நடந்து வருவது தொடர்கதையாகி உள்ளது. இதனால், ஆளுங்கட்சியினருக்கு ஒரு சட்டம், இதர அமைப்பினருக்கு ஒரு சட்டமா என போலீசார் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

Related Stories: