பொதுமக்கள் எதிர்பார்ப்பு மாவட்டம் வருசநாடு அருகே உள்ள யானை கெஜம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்

வருசநாடு, நவ.8: வருசநாடு அருகே உள்ள யானைகெஜம் ஆற்றில் உடனே தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருசநாடு அருகே யானைகெஜம் அருவி உள்ளது. இங்கு மழைக்காலங்களில் நீரூற்று ஏற்பட்டு ஆறாக ஓடுகிறது. அங்கிருந்து உப்புத்துறை, ஆத்துக்காடு, ஆட்டுப்பாறை போன்ற பகுதியின் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து தங்கம்மாள்புரம் மூல வைகை ஆற்றில் கலக்கிறது.

யானைகெஜம் ஆற்றைச் சுற்றி 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. யானைகெஜம் ஆற்றில் இருந்து நீர் வீணாக மூலவைகை ஆற்றில் கலப்பதால் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இப்பகதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஆத்துக்காடு பகுதி விவசாயி சுந்தரம் கூறுகையில், ``ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் பல ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். எனவே, தடுப்பணை கட்ட வேண்டும் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. ஆளுங்கட்சியினர் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தந்ததோடு இவ்விஷயத்தை மறந்து விடுகிறார்கள். எனவே, யானைகெஜம் ஆற்றில் உடனே தடுப்பணை கட்ட தேனி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: