ஆன்லைன் பண மோசடி 3 நாட்களுக்குள் புகார் தெரிவிக்க வேண்டும்

சிவகங்கை, நவ. 8: ஆன்லைன் பண மோசடி குறித்து மூன்று நாட்களுக்குள் புகார் தெரிவித்தால் குற்றவாளிகளை கண்டறியலாம் என மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ஆன்லைன் வரவு செலவு செய்கிறவர்கள் மற்றும் குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி ஏடிஎம் எண், வங்கி கணக்கு எண், ஏடிஎம் பின் எண் ஆகியவற்றை வங்கியின் மேலாளர் பேசுவது போல் பேசி தகவலை பெற்று அவர்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

இந்த புகாரை வங்கியின் மேலாளர்களிடம் தெரிவித்தாலும் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இப்புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிய தொழில் நுட்பம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பண மோசடி செய்தது குறித்து சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்குள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தால் குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்கலாம். இழந்த பணத்தையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் நிலுவையில் இருந்த ஆயிரத்து 952 வாரன்ட்களில் 600 வாரன்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணல் திருடர்கள் மூன்று பேர் மீது குண்டாஸ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: