திருமங்கலத்தில் விபத்தில்லாத தீபாவளி

திருமங்கலம், நவ.8:  இந்த ஆண்டு `பயர்’ கால் அழைப்புகள் எதுவும் இல்லாததால் விபத்தில்லாத தீபாவளியாக அமைந்தது திருமங்கலம் தீயணைப்புநிலையத்தினரை மகிழ்ச்சியடைய வைத்தது.தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். தீபாவளிக்கு முன்தினம் இரவு முதல் தீபாவளி நாள் இரவு வரையில் இந்த நிலையத்தின் எல்லைப் பகுதிகளிலிருந்து ஒரு இடத்தில் கூட தீவிபத்து ஏற்பட்டதாக `பயர்’ கால் ஒன்று கூட வரவில்லை.

திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் பட்டாசுகள் வெடித்தும் எந்த சேதாரங்கள், தீவிபத்துகள் குறித்து எந்த ஒரு அழைப்பும் வராததால் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆண்டு தங்களது தீயணைப்பு நிலைய எல்லைக்குள் விபத்து இல்லாத தீபாவளியாக இருந்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.எரிந்த வைக்கோல் படைப்பு:  கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்திற்குட்பட்ட நெடுங்குளம் கிராத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பாண்டி என்பவருக்கு சொந்தமான வைக்கோல்படைப்புகள் தீயில் கருகின. தகவலறிந்த கள்ளிக்குடி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று வைக்கோல் படைப்பில் பற்றிய தீயை அணைத்தனர். இருந்தாலும் வைக்கோல் படைப்பில் பாதிக்குமேல் எரிந்து தீயில் கருகியது. இது தவிர வேறுபெரிய அளவில் கள்ளிக்குடி பகுதியில் தீவிபத்துகள் நடைபெறவில்லை.

Related Stories: